தீர்க்கவாகு என்னும் முனிவர் சிவபெருமானுக்கு திருமஞ்சனம் செய்ய விரும்பினார். அதனால் ஆகாய கங்கை நீரை வரவழைக்க தமது கையை மேலே உயர்த்தினார். அவ்வாறு உயரத் தூக்கிய கை குறுகியதால் நீர் அவரது கையில் விழுந்தது. அதனால் இத்தலம் 'குறுக்கை' என்று வழங்கப்படுகிறது. கோயிலில் முனிவருக்கு தனி சன்னதி உள்ளது.
சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. மன்மதனை எரித்த தலம். அதனால் இத்தலத்து இறைவன் 'வீரட்டேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'வீரட்டேஸ்வரர்', 'யோகீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், மேற்கு திசை நோக்கி, லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'ஞானாம்பிகை', 'பூர்ணாம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
இக்கோயிலில் உள்ள மதன சம்ஹார மூர்த்திக்கு வருடத்திற்கு ஆறுநாள் மட்டுமே, அதாவது சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி தட்சிணாயனம், மாசி மகம், உத்தராயணம் ஆகிய தினங்களில் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோயிலில் உள்ள நடராஜர் சபை 'காமாங்க நாசனி சபை' அல்லது 'சம்புவிநோத சபை' என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலுக்கு சிறிது தூரத்தில் வெள்ளை மணல் உள்ள ஒரு இடம் உள்ளது. அது திருநீறு போல் உள்ளது. இந்த இடத்தில் தான் சிவபெருமான் மன்மதனை எரித்து சாம்பலாக்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு எதிரில் சூல தீர்த்தம் உள்ளது.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|